இணையத்தில் கசிந்த கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் தகவல்கள்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சாம்சங் மியூசிக் கிரியேஷன் செயலியான சவுண்டுகேம்ப் ஸ்கிரீன்ஷாட்களில் சாம்சங் கேலக்ஸி S9 போன்று காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது.

இத்துடன் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் அறிவிக்கப்படாத சாம்சங் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களை தனது சவுண்ட்கேம்ப் செயலியில் பயன்படுத்தி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்கள் கேலக்ஸி S9 ரென்டர் மற்றும் வடிவமைப்பை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சாம்சங் சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

இதேபோன்று வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் SM-G965U1 என்ற பெயரில் கீக்பென்ச் தளத்தில் காணப்பட்டது. சிங்கிள் கோரில் 2422 புள்ளிகளும், மல்டி கோரில் 8351 புள்ளிகளை பெற்றுள்ளது. கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனை விட 25 சதவிகித சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளது.

இத்துடன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மொபைல்ஃபன் வெளியிட்டுள்ள கேஸ் ரென்டர்களில் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

முன்னதாக கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புற பேனல்கள் இணையத்தில் கசிந்திருந்தது. இதில் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், மற்றும் அடுத்த தலைமுறை PCB தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »