இனிப்பு சாப்பிட்டு மகிழ்ச்சியாய் இருங்க!

ஓவென்று அழுதுகொண்டிருக்கும்  குழந்தைகளுக்குக் கூட இனிப்புக் கொடுங்கள் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். இனிப்பு நம்முடைய நாக்குக்கு மட்டும் சுவையளிப்பதில்லை நமது மனத்திற்கும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகின்றது. கோவில்களிலும் இனிப்பைத் தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போன்ற இனிப்புகள் நமக்கு இன்பத்தைப் பெருக்க உதவுகின்றன.

உணவிற்கும் உணர்விற்கும் தொடர்பு உள்ளது உங்களுக்குத் தெரியுமா? காபி, டீ, சாக்லெட்டில் உள்ள காபின் எனும் பொருள், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதனால் தான், நாம் சோர்வாக இருக்கும் போது காபியோ, டீயோ அருந்துகின்றோம். ஆனால், அளவுக்கு மீறினால் அதுவே பதற்றம், பயம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், நம்முடைய மனமும் மூளைத் திறனும் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், நம் உடலில் சர்க்கரை அளவைச் சீராக வைத்துக் கொள்ள உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை.

நமது சிந்தனை, உணர்வு, நடத்தை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் மூளையில் உள்ள வேதிப் பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு. சில உணவுப் பொருட்களில் நிறம், வண்ணம் போன்றவற்றிற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள், நமது மூளையைப் பாதிக்கும். அதனால், நம்முடைய  உணர்வுக்கும் பாதிப்பு. உணவுப் பொருட்களில் உள்ள வைட்டமின்கள், கனிமங்கள்(minerals), கொழுப்பு அமிலங்கள் போன்றவை உடல் நலத்தை மட்டுமின்றி  மனநலத்தையும் பாதுகாக்கிறன்றன.

வைட்டமின் பி குறைபாட்டிற்கும் மூளைக் கோளாறு(schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய்க்கும் சம்பந்தம் உண்டு. அதே போல, கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்த வல்லது.

நேரத்திற்குச் சாப்பிடுவது அவசியம். இனிப்பு உண்டால் உற்சாகம் கிடைக்கும் என்பதால், அதிகமாக இனிப்பை உட்கொள்ள வேண்டாம். எதிலும், ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »