அந்தரத்தில் பறந்து வரும் பொலிசார்: தொழில்நுட்பத்தில் கலக்கும் துபாய்

துபாய் பொலிசார் பறக்கும் பைக்குகளை பயன்படுத்த பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

துபாய் அரசு Hoversurf S3 2019 எனும் பறக்கும் பைக்குகளை பொலிசாருக்காக வழங்கியுள்ளது. இந்த பைக்குகளை Hoversurf என்ற அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே லம்போர்கினி, ஃபெராரி போன்ற முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களை துபாய் பொலிசார் பயன்படுத்தி வரும் நிலையில், இனி இந்த பறக்கும் பைக்குகளை பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்கார்பியன் என்று குறிப்பிடப்படும் இந்த பறக்கும் பைக்குகளின் விலை சுமார் 10 மில்லியன் என்று கூறப்படுகிறது. ஜிட்டெக்ஸ் என்ற மாநாடு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்றது.

அப்போது பறக்கும் பைக்குகள் தொடர்பான சில தகவல்களை Hoversurf நிறுவனம் வெளியிட்டது. தற்போது துபாய் பொலிசாருக்கு இந்த பைக்குகளை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பைக்குகளின் சிறப்பம்சங்கள் குறித்து துபாய் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த பறக்கும் பைக்கின் மொத்த எடை 114 கிலோ மட்டுமே. இது அதிகபட்சமாக 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 96 கிலோ மீற்றர்கள். இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது தவிர ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆள் இல்லாமலும் இதனை இயக்கலாம். இதில் ஆள் இருந்தால் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்க முடியும்.

அதே சமயம் ஆள் இல்லாவிட்டால் 40 நிமிடங்கள் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் இதற்கு உண்டு. இவை மின்சாரத்தால் இயங்கக்கூடியவை. சுமார் இரண்டரை மணிநேரம் இதனை முழுமையாக சார்ஜ் செய்ய ஆகும்.

அவசரமான சூழ்நிலைகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த பறக்கும் பைக்குகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். முதற்கட்டமாக ரோந்து பணியிலும், விபத்தில் சிக்கியவர்களுக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கும் பணியிலும் இதனை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

வரும் 2020ஆம் ஆண்டில் இந்த பறக்கும் பைக்குகள் துபாய் காவல் துறையில் சேர்க்கப்படும் என்று கூறப்படும் நிலையில், பொலிசார் பறக்கும் பைக்குகளில் தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »