பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த பிரிட்டன் தகவல் ஆணையம்

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து பல லட்சம் பயனர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்த அனுமதியளித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முன் ஆஜராகி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் எவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவிற்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
அரசியல் பிரச்சாரங்களில் தகவல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையை தொடர்ந்து ஃபேஸ்புக் மீது 5,00,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருப்பதாக பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் தெரிவித்து இருக்கிறார்.
மக்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் தவறவிட்டதாகவும், தகவல் பயன்பாடு மற்றும் மற்றவர்கள் எவ்வாறு தகவல்களை பெறுகின்றனர் என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை எனவும் டென்ஹாம் தெரிவித்திருக்கிறார்.
“சமூக வலைதளத்தின் குறிப்பிட்ட பகுதி பயனர்களை, புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சார நிறுவனங்களை வாக்காளர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கின்றன. எனினும், இதுபோன்ற வழிமுறைகள் சட்டத்திற்கு எதிரானது,” என டென்ஹாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் முன் ஃபேஸ்புக் பதில் அளிக்க முடியும். அந்த வகையில் பிரிட்டன் தகவல் ஆணையரின் அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இதற்கு பதில் அளிப்பதாகவும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இதர நாட்டின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை போன்றே பிரிட்டன் தகவல் ஆணையத்துக்கும் வழங்குவோம்.” என ஃபேஸ்புக் நிறுவன மூத்த பாதுகாப்பு அலுவலர் எரின் எகான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »