ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை மற்றும் முழு விவரங்கள்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை அறிவித்து, 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகாஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.

ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

தற்சமயம் பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில், மாதம் 100 ஜிபி டேட்டாவினை, அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூருவில் மாதம் 50 ஜிபி டேட்டாவை 40Mbps வேகத்தில் ரூ.799 விலையில் வழங்குகிறது. இந்நிலையில், ஜியோவின் ரூ.700-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் சேவைகள் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்தது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »