ஜிமெயில் பஞ்சாயத்துக்கு பதில் அளித்த கூகுள்

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பதில் கூகுள் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் தரப்பு செயலிகள் சார்பில் கேட்கப்படும் தகவல்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அவசியமானது தானா என்றும், அவை சரியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை கூகுள் மிகவும் கண்டிப்புடன் கண்கானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் மென்பொருள் உருவாக்குவோரில் நூற்றுக்கணக்கானோர் மூன்றாம் தரப்பு ஜிமெயில் செயலிகளின் மூலம் பயனரின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் டெவலப்பர்களின் பணியாளர்கள் ஜிமெயில் பயனர்களின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இயக்க வசதி பெற்றிருந்தனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.

நிறுவனங்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் ரிட்டன் பாத் எனும் விளம்பர நிறுவனம் தனது பணியாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8000 பயனர் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவன மென்பொருள்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டது.

இதே வலைப்பதிவில் கூகுள் பயனரின் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் விளம்பரங்களை வழங்குவதற்கு என பயனர் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்யும் வழக்கத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தானியங்கி வழிமுறைகளால் பலர் ‘கூகுள் உங்களின் மின்னஞ்சல்களை வாசிக்கிறது’ என தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உண்மையில் கூகுள் தரப்பில் யாரும் உங்களது மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை, எனினும் பயனர் சார்பில் பிரத்யேக சூழல்களில் முறையான அனுமதி பெறப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என கூகுள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »