விரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…

விரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…

இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் ஒன்றாக இணைந்து தொழில் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ரீடெய்ல் சந்தையின் ஒரு பகுதியை அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது.  உலக அளவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் வால்மார்ட், சென்ற ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.

இந்நிலையில் அமேசான் – ரிலையன்ஸ் கூட்டணி, அந்நிறுவனத்துக்கு சவாலாக இருக்கும் எனப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசு, இணைய வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அதேவேளையில் ரிலையன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு அரசின் புதிய விதிமுறைகள் சாதகமாக அமைந்தன.

இப்படிப்பட்ட சூழலில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர அமேசான், விருப்பம் தெரிவித்து வருகிறதாம். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமேசான், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

எனினும் இந்த பரபரப்பு தகவல் குறித்து அமேசான் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டது. அதேவேளையில் ரிலையன்ஸ் நிறுவனம், “முறையான நேரத்தில் தகவல் தெரிவிப்போம்” என்று சூசகமாக தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய அனுபவம், சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ் போன்றவைகள் ரிலையன்ஸுக்குப் பயன் தரும். அமேசானுக்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் இருக்கும் 10,600 கடைகளால் பொருட்பட்டியல் நீளும்.

ரிலையன்ஸ் நிறுவனம் முன்னதாக சீனாவின் அலிபாபா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட பேசிவந்தது. ஆனால், இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை என்பதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.