நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO!

நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO!

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார்!

நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பை சுற்றியவாறு ஆய்வு செய்யும் ஆர்பிட்டரும், தென் துருவத்தில் தரை இறங்க லேண்டர் கலனும், நிலவின் தரை பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் கலனும் வடிவமைக்கப்பட்டன.

சந்திரயான்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் சீராக இயங்கி வந்தது. இதனைத்தொடர்ந்து நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் வகையில் விண்கலத்தின் வேகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து வந்தனர். அதன்பிறகு படிப்படியாக 5 முறை சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டது.

கடந்த 2-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. 3-ஆம் தேதி மற்றும் அதற்கு மறுதினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது. விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருப்பதாகவும் இஸ்ரோ இயக்குநர் சிவன் தெரிவித்துள்ளார்.

எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் சந்திரயான் -2 திட்டமே தோல்வி எனக் கருத முடியாது. ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதி இதுநாள் யாருமே நெருங்காத பகுதியாகும். இதற்கு முன் நிலவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும்
வட துருவம் அல்லது பூமத்திய ரேகை பகுதியில்தான். சீனா மற்றும் ரஷ்யாவின் நிலவு திட்டங்கள் வட துருவப் பகுதியிலும், அமெரிக்காவின் அப்பல்லோ உள்ளிட்ட பெரும்பாலான நிலவில் தரையிறங்கும் முயற்சிகள் பூமத்திய ரேகை பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.