கொலையாளியை காட்டிக்கொடுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

கொலையாளியை காட்டிக்கொடுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

சீனாவில் பெண் ஒருவரை கொன்ற இளைஞரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டிக்கொடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பல வேலைகள் எளிமையாகியிருக்கிறது. இதே தொழில்நுட்பம் பல நிறுவனங்களின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக பேசப்பட்டுவரும் நிலையில், குறிப்பாக முகத்தை வைத்து மனிதர்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்திற்கு எதிராக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பம் மூலம் சில பயன்களும் நடக்கதான் செய்கின்றது.

சீனாவைச் சேர்ந்த 29வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடனான பணம் கொடுக்கல் வாங்கல் தகறாரில் வாக்குவாதம் முற்றி அவரை கொலை செய்துவிட்டார். கொலை செய்த பின்பு, அந்த பெண்ணின் செல்போனை பயன்படுத்தி, கடன் வழங்கும் செயலியான Money Stationல் அந்த பெண்ணின் முகத்தை ஸ்கேன் செய்திருக்கிறார். இந்த செயலியானது கடன் வழங்கும் வழிமுறைகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. இதன் ஒருபகுதியாக அந்த பெண்ணின் முகத்தை ஸ்கேன் செய்தபோது, கண்ணின் இமைகள் துடிக்காமல் அப்படியே இருப்பதை அந்த தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளது. அதோடு, பெண்ணின் பெயரில் இருக்கும் அந்த கணக்கானது, ஆண் குரலில் கடன் கேட்பதையும் கண்டறிந்து, பெண்ணுக்கு பதிலாக ஆண் கடன் கோருகிறார் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் எச்சரிக்கையையடுத்து அந்த நிறுவனத்தின் பணியாளர் சோதித்து பார்த்தபோது, பெண்ணின் முகத்தில் காயங்களும், கழுத்தைச் சுற்றி சிவப்பு நிறத்தில் குறியும் இருந்தது. அந்த பெண் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்த அந்த பணியாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, அந்த கொலையாளி இருக்கும் இடத்தை கண்டறிந்து சென்ற போது, அந்த கொலையாளி யாருமில்லாத இடத்தில் வைத்து கொலை செய்த பெண்ணை எரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் கொலையாளியை கைது செய்தனர்.

தன் காதலியை கொலை செய்வதற்கு முன்பு, அப்பெண்ணின் செல்போன் மூலம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 30,000 யான்களை திருடியதோடு, அப்பெண்ணின் பெற்றோரிடம் அந்த பெண் சுற்றுலாவிற்காக வெளியூர் செல்ல இருக்கிறார் என்று தெரிவித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது, வங்கிகள், பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் facial மற்றும் voice recognition தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. பல செல்போன் நிறுவனங்கள் தங்கள் செல்போன்களின் முக்கிய பாதுகாப்பு வசதியாக இவற்றை குறிப்பிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.