எலும்புப் புற்றுநோய்

எலும்புப் புற்றுநோய்
கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.
1) பரவும் தன்மை கொண்டது.
2) பரவாத தன்மை கொண்டது
என 2 வகைகள் உள்ளன. பரவும் கட்டியை மாலிக்னட் ட்யூமர் என்றும் பரவாத புற்று நோயை பினையின் ட்யூமர் என்றும் அழைப்பர். பரவாத கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.இதற்காகசெய்யப்படும் சிகிச்சைக்கு பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.இந்த எலும்புப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். எனினும் எக்ஸ்ரே, போன் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் மிக மிகத் துல்லியமாக பரவியுள்ள அளவையும் கண்டறிய முடியும். மேலும் என்ன வகையான புற்றுநோய் அதற்கு என்ன சிகிச்சை தேவைப்படும் என்பதை திசுப் பரிசோதனை செய்து 100% உறுதியாகக் கூறிவிடலாம்.
புற்றுநோயிலுள்ள 2 வகைகள்:
1. முதல் நிலை எலும்புப் புற்று:
20 வயதுக்கு கீழ் அல்லது 50, 60 வயதுகளில் தாக்குகிறது.இந்த முதல் நிலை எலும்புப் புற்று நோயில் எலும்பில் புற்று நோய் தோன்றி மற்ற இடங்களுக்கு பரவும்.முதல் நிலை எலும்புப் புற்றுநோய் தோள் பட்டை, கை மணிக்கட்டு, கால் முட்டி போன்ற இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
2. இரண்டாம் நிலை எலும்பு புற்று:
60 வயதுக்கு மேல் உள்ள மனிதர்களையே தாக்குகிறது. இது உடலின் வேறு பாகத்தில் தோன்றிபுற்றுநோயாகப் படிப்படியாக பரவி எலும்பினை பாதிக்கும் புற்று நோய் இரண்டாம் நிலையாகும். இந்த எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள் நோயாளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஏற்படும் இடங்களைப் பொறுத்தே புற்றுநோய் அறிகுறிகளை அறிய முடியும். வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, எலும்பு முறிவு இது போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.
சிலபேருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகள் எடுத்த பின்பு இது சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
சிகிச்சை முறைகள் :
1. கீமோ தெரபி
2. ரேடியோ தெரபி
3. அறுவைச் சிகிச்சை
ஹீமோ தெரபியில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும், கட்டுப்படுத்தும் மருந்துகளை உண்ண வேண்டும். ரேடியோ தெரபியில் கதிரியக்க அலைகள் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படும். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது. எலும்புப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து எலும்பை எடுத்து, மாற்றி வைப்பது அல்லது Stainless Steel ல் செய்த எலும்பை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துவது அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று எலும்புகளைப் பொருத்தி ஊனமாகும் சூழ்நிலையைத் தவிர்க்லாம். இதனால் தரமான வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.