ஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..

ஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..

பெண்களின் கல்வியும், பணியும் இப்போது எல்லைகடந்ததாக இருக்கிறது. அவைகளில் அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வீட்டைவிட்டு வெளியேறி, வெளி இடங்களுக்கு சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக பெரும்பாலான பெண்கள் ஆஸ்டலை நாடுகிறார்கள்.

தாங்கள் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு பிடித்தமானதொரு ஆஸ்டலை தேடுகிறார்கள். புதிய நகரங்களுக்கு வரும் அவர்கள், ஆஸ்டலை தேர்ந் தெடுக்கும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியதிருக்கிறது.

அப்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

* பொறுப்பான பெண் வார்டன் இருக் கிறார்களா என்று பார்க்கவேண்டும். அவர்கள் தாய்மை உணர்வுகொண்டவர்களாக இருக்கவேண்டியதும் அவசியம்.

* முக்கியமான இடத்தில், உங்களுக்கு பிடித்த சவுகரியங்களோடு இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள வேண்டாம்.

* ஆஸ்டல் நிர்வாகி யார், அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்கவேண்டும். அவரது சமூக நிலை என்ன, அரசியல் பின்னணி கொண்டவரா, ஏதாவது குற்றச் செயல்களில் முன்பு தொடர்புடையவரா என்பது போன்ற விஷயங் களையும் சேகரிக்க முயற்சி செய்யுங்கள்.

* உணவின் தரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். முதலிலே சாப்பிட்டு பார்த்து, உங்களுக்கு அது ஒத்துப்போகிறதா என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

* ஆஸ்டலின் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். அது மனதுக்கு பிடித்தமானதாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் அமையவேண்டும்.

* அருகில் கடைகள், மருத்துவ வசதி இருக்கவேண்டும்.

* ஆஸ்டலின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஆஸ்டல் பற்றி ஏதேனும் புகார் உள்ளதா என்றும் விசாரிக்கவேண்டும்.

டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் ஆஸ்டலில் நடந்த சம்பவம்: ஆஸ்டல் நிர்வாகி, பெண்கள் குளிக்கும் அறையில் கேமராவை மறைத்து வைத்து தன் அறையில் இருந்தபடி பெண்கள் குளிப்பதை கண்டு ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதை தெரிந்து கொதித்துப்போன பெண்கள் அந்த நிர்வாகியை அடித்து உதைத்துவிட்டார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

விடுதிகளில் தங்கும் பெண்கள் விலைஉயர்ந்த பொருட்களை தங்களுடன் வைத்துக் கொள்ளக்கூடாது. வைத்திருந்தால் அதை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய வேலையாகிவிடும். விலைஉயர்ந்த தங்க நகைகள் அணிய வேண்டியிருந்தால் அதை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். முக்கியமாக யாரையும் அதிகம் நம்பிவிடக் கூடாது. புது இடத்தில் புதிய முகங்களை அறிமுகமில்லாத நபர்களை அதிகம் நம்புபவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள்.

அறையில் உங்களுடன் தங்கியிருக்கும் பெண்களிடம்கூட எச்சரிக்கை உணர்வுடன் பழகவேண்டும். ஒருவர் செய்யும் தவறின் பழி மற்றவரையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நீங்கள் ஒழுக்கமானவர், நல்லவர் என்பதை முதலில் எல்லோரிடமும் செயல், பேச்சு மூலம் புரியவைத்து விட வேண்டும். அப்படிப்பட்டவர்களிடம் மட்டுமே நீங்கள் நட்பும், நம்பிக்கையும் வைக்க வேண்டும். அறிமுகமற்றவர்களிடம் உங்களை பற்றிய எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது. எந்த ஊரில் உங்கள் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தகவலையும் எல்லோரிடமும் சொல்லவேண்டாம்.

இளம்பெண் தங்கியிருந்த ஆஸ்டலுக்கு நடுத்தரவயதான ஒருவர் வந்தார். அந்த பெண்ணுடைய சித்தப்பா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து விட்டதாக கூறினார். அவரை குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார். உடனே அவளும் பதறி யடித்துக் கொண்டு அவரோடு அந்த மருத்துவ மனைக்கு செல்ல முன்வந்தாள். உடனே ஆஸ்டல் நிர்வாகி, அந்தப் பெண்ணின் உதவிக்கு இரண்டு தோழிகளையும் அனுப்பிவைத்தார்.

உடனே சுதாரித்துக்கொண்ட அந்த நபர், அவர்களை வெளியே அழைத்துச்சென்று, ஒரு பஸ்சில் அமரவைத்துவிட்டு, அப்படியே நழுவிச்சென்றுவிட்டான். அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது அங்கு தனது சித்தப்பா அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மை தெரிந்தது. சித்தப்பாவிற்கு போன் செய்த போது அவர் ஆரோக்கியமாக சொந்த ஊரிலே இருந்துகொண்டிருக்கும் தகவல் தெரிந்தது. அந்த ஏமாற்றுக்காரன் எப்படி அவளது சித்தப்பா பெயரை தெரிந்துகொண்டான்? அவள், இந்த விடுதியில் தங்கியிருப்பதும் எப்படி அவனுக்கு தெரிந்தது? என்பதெல்லாம் அவளுக்கு இப்போதும் பிடிபடாத ரகசியமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆஸ்டலுக்கு பெண்ணை அனுப்பும் பெற்றோர்கள், அங்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை முதலிலே மகளுக்கு நன்றாக புரியவைக்கவேண்டும். என்ன தான் ஆஸ்டல் பாதுகாப்பானதாக இருந்தாலும் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கவேண்டும். அங்கு தேவையற்ற நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அறையில் உடன் தங்கி இருப்பவர்களின் நடவடிக்கைகளை கவனியுங்கள். நேரத்தோடு இருப்பிடத்திற்கு சென்றுவிடவேண்டும். வீட்டைப் பற்றி அதிகம் கவலைப்பட்டு மனசு கலங்காமல் இருப்பது நல்லது.

ஆஸ்டல் வாழ்க்கை தற்காலிகமானதுதான். அதனால் குடும்பத்தினருடன் ஏற்படும் பிரிவை நினைத்து படிப்பிலோ, வேலையிலோ ஆர்வத்தை குறைத்துக்கொள்ளக்கூடாது. அறிமுகமில்லாத யாருக்கும் ஆஸ்டல் அட்ரஸ் தொலைபேசி எண்ணை தரவேண்டாம். அடிக்கடி குடும்பத்தினருடன் பேசி, ஆஸ்டலில் நடக்கும் செய்திகளை தெரியப்படுத்துங்கள். அதே ஊரில் வசிக்கும் உறவினர்களின் வீட்டு முகவரி தொலைபேசி எண்களை கைவசம் வைத்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.